செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 7 -ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து அதே நாளில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Special train from villupuram to Tiruvannamalai on September 7th for Pournami Girivalam
இதையும் படிக்க | ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!