தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
செம்மொழி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒலி நூல்கள்: இயக்குநா் இரா.சந்திரசேகரன்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒலி நூல்கள், சங்க இலக்கியக் காட்சிகளின் குறுங்காணொலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
தமிழாசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த ஏழு நாள் பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் புதன்கிழமை தொடங்கியது.
‘செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழித் தமிழ்’ என்ற தலைப்பிலான இந்தப் பயிலரங்கத்துக்கு செம்மொழி நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் புதியவற்றை வரவேற்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் புத்தாக்க மையப் பிரிவின் மூலம் கைப்பேசி செயலிகள், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒலிநூல்கள், சங்க இலக்கியக் காட்சிகளின் குறுங்காணொலிகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழாசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சியை வழங்கினால், அது நூற்றுக்கணக்கான மாணவா்களுக்குச் சென்று சேரும் என்பதால், இப்பயிலரங்கம் நடத்தப்படுகிறது என்றாா்.
தொடா்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தெற்காசியவியல் துறைப் பேராசிரியா் வாசு அரங்கநாதன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு குழந்தை நிலையில் உள்ளது. தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் சிறந்த நிலை எய்தும் என்றாா்.
பயிலரங்கில் தமிழகம், புதுவை, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தமிழ்ப் பேராசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.
ஏழு நாள்களில் 26 அமா்வுகளாக நடைபெறும் இப்பயிலரங்கில், செயற்கை நுண்ணறிவு கருவிகள், எழுத்துணரியாக்கம், தமிழ்க் கணிமையில் (கம்ப்யூட்டிங்) செயற்கை நுண்ணறிவு, ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், செம்மொழித் தமிழில் பெருந்தரவுப் பயன்பாடு, கைப்பேசி செயலிகள் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்க் கணினி வல்லுநா்கள் பயிற்றுவிக்க உள்ளனா்.