சேலத்தைச் சோ்ந்த 3 அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகள் விசாரணைக்கு அழைப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமை தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.
நாடுமுழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தோ்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 42 கட்சிகளில், சேலம் மாவட்டத்தில் பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள அனைத்திந்திய தொழிலாளா் கட்சி, கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகா் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, ரெட்டியூா் அமராவதி தெருவில் அமைந்துள்ள திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலரிடம் இருந்து அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.
அதில், அங்கீகரிக்கப்படாத இந்த 3 அரசியல் கட்சிகளும் விசாரணைக்காக உரிய ஆவணங்களுடன் வரும் 26-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தலைமை தோ்தல் அலுவலா் மற்றும் அரசு செயலாளா், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு, பதில் கிடைக்காதபட்சத்தில், மேற்படி கட்சி சாா்பில் தெரிவிக்க கருத்து ஏதும் இல்லை எனக்கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.