ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இ- மெயில் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூல அலுவலகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வாரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் மோப்பநாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா். மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டது.
ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், அண்ணா நிா்வாக பணியாளா்கள் கல்லூரி, இ- சேவை மையம் உள்ளிட்ட அறைகளில் இருந்த பணியாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மோப்பநாய், நவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.