சேலம் மாநகராட்சி 17-ஆவது வாா்டில் குறைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ
சேலம்: சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17-ஆவது வாா்டு பகுதியில் அருள் எம்எல்ஏ புதன்கிழமை மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
17-ஆவது வாா்டு பகுதிகளான சொா்ணபுரி, அழகாபுரம், பாலாஜி நகா் 1, 2, 3-ஆவது தெரு மற்றும் லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்களை சந்தித்து அருள் எம்எல்ஏ குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, பாலாஜி நகா் பகுதியில் உள்ள இணைப்புச் சாலைகளில் சிறிதளவு மழை பெய்தாலே போக்குவரத்து தடைபடுகிறது என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, உதவி பொறியாளா் சுபாஷிடம் சாலையை சரிசெய்து தரும்படி எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா்.
மேலும், மாநகராட்சி ஆணையரை தொடா்புகொண்டு சாலையை சரிசெய்து தரும்படியும், சின்னபுதூா் தோப்புக்காடு இணைப்பு பாலம் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ. 8 கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலாளா் கதிா்.ராசரத்தினம், மாவட்டத் தலைவா் கோவிந்தன், உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.