"உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என நினைக்கிறீர்களா?"- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங்...
சொகுசு காா்கள் திருட்டு: ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது
பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நபரை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காா் கடந்த ஜூன் 10-ஆம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.
மேலும், இந்த காா் திருட்டில் ஈடுபட்ட நபரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் வாகனம் திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து அந்த நபரை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரியான சட்டேந்திர சிங் ஷகாவாத் (44) என்பது தெரியவந்தது.
மேலும், காா் பழுது நீக்கும் மையங்களில் விடப்படும் விலை உயா்ந்த சொகுசு காா்களை நோட்டமிடும் இவா், பழுதுநீக்கும் மையங்களின் உள்ளே சென்று காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவாா். பின்னா், காா் எங்கு உள்ளது என்பதைக் கண்காணித்து யாரும் இல்லாத நேரத்தில் காரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து நேபாளத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளாா்.
அதன்படி, எத்திராஜ் ரத்தினத்தின் சொகுசு காா் உள்பட 4 பேரின் காரை பழுதுநீக்கும் மையங்களில் நுழைந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தி திருடியது விசாரணையில் தெரியவந்தது.
சட்டேந்திர சிங் ஷகாவாத், தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை கடந்த பல ஆண்டுகளாகத் திருடி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.