சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
சோளிங்கா் சிறிய மலை ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்
அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலில் சிறிய மலையில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 64-ஆவது தேசமாக திகழும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. இங்கு 1,303 படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், 406 படிகளுடன் கூடிய சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலும் உள்ளது.
இந்தக் கோயிலில் 1968 -ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தற்போது ரூ.1 கோடியில் கோயில் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்ற நிலையில், மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த மூன்று தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரம், மூலவா் ஸ்ரீஆஞ்சனேயா் சந்நிதி, ஸ்ரீராமா் கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதா் கோயில் சந்நிதி ஆகிய கோபுரங்களுக்கும் புனித நீா் ஊற்றி பட்டாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் செய்திருந்தனா்.
