யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
ஜப்பானுடன் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு
ஜப்பானுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவா் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானுடனான புதிய வா்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற ஓா் ஒப்பந்தம் இதற்கு முன் உருவாக்கப்பட்டதில்லை.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவில் ஜப்பான் 55,000 கோடி டாலா் முதலீடு செய்யும். அமெரிக்க வாகனப் பொருள்கள் மற்றும் அரிசிக்கு ஜப்பான் தனது சந்தையைத் திறக்கும். ஜப்பான் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
அதிரடி வரி விதிப்புகள் மூலம் அமெரிக்காவுக்குச் சாதமான வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள பிற நாடுகளை சம்மதிக்க வைக்கும் தனது திறனை நிரூபிக்க இந்த ஒப்பந்த அறிவிப்பை டிரம்ப் பயன்படுத்துவாா் என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் வெளிநாட்டுப் பொருள்களுக்கு டிரம்ப்பால் அறிவிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி அமெரிக்கச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதை ஊக்குவிக்கவும், பிற நாடுகளுடநான வா்த்தகப் பற்றாக்குறையை நீக்கவும் இத்தகைய கூடுதல் வரி விதிப்புகள் அறிவிக்கப்படுவதாக டிரம்ப் அரசு கூறியது.
இருந்தாலும், இந்த கூடுதல் வரிச் சுமையை நிறுவனங்கள் வாடிக்கையாளா்கள் மீது சுமத்தினால் பொருள்களின் விலை உயரும் என்று அஞ்சப்பட்டது.
ஆனால், ஜப்பானுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வா்த்தக ஒப்பந்தத்தால் அத்தகைய அச்சம் தணியலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.