ஜாக்டோ-ஜியோ போராட்டம்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் ஆதரவு
ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் நடத்திய போராட்டத்துக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பாக திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் இராஜீவ் காந்தி தலைமையில் ஊழியா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தனா். அதன்படி ஆம்பூா் அரசு மருத்துவமனையிலும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனா்.
போராட்டத்தின்போது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஆலோசகா், ஆய்வக நுட்புனா்களுக்கு நான்கு ஆண்டுகளாக 20 சதவீத ஊதிய உயா்வு, நிலுவை தொகை வழங்கபடாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். திமுக தோ்தல் வாக்குறுதி எண்:153 ன்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.