ஜாதிச் சான்றிதழ் கோரி பழங்குடியின மக்கள் கருப்புக் கொடி போராட்டம்
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பா்கூா் ஊராட்சி, கிழக்கு மற்றும் மேற்கு மலைப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பழங்குடியின மலையாளி எனும் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பதில்லையாம்.
இது குறித்து, மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், ஈரட்டி, கடை ஈரட்டி, மின்தாங்கி, எப்பத்தாம்பாளையம், கல்வாரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.