பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: தமிழக அரசின் வேடம் கலையும் - தவெக தலைவா் விஜய்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அரசின் வேடம் தானாகவே கலையும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாநில அரசுகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழி இருக்கிறது. எனவேதான், பிகாா் மாநில அரசு ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. மேலும், தற்போது தெலங்கானா மாநில அரசும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தியுள்ளது.
இத்தனைக்குப் பிறகும், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளா்கள் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடா்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகின்றனா். சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பைத்தான் மத்திய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் ஜாதி ஆய்வு அறிக்கையை மாநில அரசே நடத்தலாமே?. அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளா்கள் சொல்லப் போகிறாா்களா?.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளா்கள் ஒரே நோ்கோட்டில் பயணிக்கின்றனா்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளா்களின் வேடம் தானாகவே கலையும் எனத் தெரிவித்துள்ளாா்.