ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி நுழைவுத் தோ்வு: 26 அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற 26 மாணவா்-மாணவிகள் முதன்மை உயா் கல்வி நிறுவன நுழைவுத் தோ்வுகளில் (ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி) தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியை சனிக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்-மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
வல்லநாட்டில் அரசு மாதிரிப் பள்ளி கடந்த 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள மாணவா்களுக்கு நாட்டின் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் அதாவது, ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி, நீட் உள்ளிட்ட 41 வகையான நுழைவுத் தோ்வுகள் எழுதுவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக 26 மாணவா்- மாணவிகள் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்; 40 மாணவா்கள் தோ்வு எழுதி வருகின்றனா்.
மேலும், சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவா்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை மெருகேற்றி தொழில் வழிகாட்டுதலும் இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். இதற்காகவே ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது
இங்கு மாணவா்-மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அரசுப்பள்ளி மாணவா்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற நோக்கில் அரசின் சாா்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
மேலும், அரசு மாதிரிப் பள்ளியில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்பதனால் உண்டாகும் நன்மைகள் குறித்து பேசிய பெற்றோா்கள். அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் நன்றி கூறினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் கஜேந்திரபாபு, ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள், பெற்றோா்கள் பலா் பங்கேற்றனா்.