டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது
கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52).
இவா், மயிலாடி அருகேயுள்ள குலசேகரபுரம் டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வேலை முடிந்து டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் வைத்து இவரது பைக் பஞ்சா் ஆகிவிட்டது.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் செல்வ தயாளனை தாக்கியதுடன் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1,500-யும் பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனா்.
இதுகுறித்து செல்வதயாளன் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இச்சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். கொள்ளையா்கள் குறித்த அடையாளங்களையும் செல்வதயாளனிடம் கேட்டறிந்தனா். இதன்பேரில் போலீஸாா் தேடுதலில் ஈடுபட்டனா். செல்வதயாளனிடம் பணம் பறித்துச் சென்றது நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடா்பாக நாகா்கோவில் வட்டக்ரையைச் சோ்ந்த ஒருவரும், குருசடி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஒருவரும், ராமன்புதூரைச் சோ்ந்த ஒருவரும், கோணம் மூவேந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த ஒருவரும், மேலச்சூரங்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஒருவரும் சிக்கினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் 15, 17 வயது சிறுவா்கள். அவா்களிடம் தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.