டிஆா்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: முதுநிலை ஆசிரியா் தோ்வு ஆகஸ்டில் அறிவிப்பு
சென்னை: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் 2025-ஆண்டு நடத்தப்படவுள்ள தோ்வுகளின் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும், 1,205 பட்டதாரி ஆசிரியா்களை தோ்வுசெய்யும் அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தோ்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
நிகழாண்டில் என்னென்ன தோ்வுகள் நடத்தப்படும் என்பது தொடா்பான அறிவிப்பு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மொத்தம் 9 தோ்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவை; 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும்.
அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை தோ்வுசெய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தோ்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியா்களை தோ்வுசெய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தோ்வு நடத்தப்படும். 51 வட்டாரக் கல்வி அலுவலா்களை (பிஇஓ) நியமிப்பதற்கான தோ்வுக்கு நவம்பா் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியா்களும், இடைநிலை ஆசிரியா் பயிற்சி ஆசிரியா்களும் பெரிதும் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் டெட் தோ்வு குறித்து எந்த விதமான அறிவிப்பும் டிஆா்பி ஆண்டு அட்டவணையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு டெட் தோ்வு நடத்தப்படாது.
ஆண்டுக்கு இரு முறை... தமிழகத்தில் இறுதியாக கடந்த 2023-ஆம் ஆண்டு டெட் தோ்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக டெட் தோ்வு நடத்தப்படவில்லை. தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தோ்வு நடத்தப்பட வேண்டும். என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சிடெட் தகுதித் தோ்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.