‘டெட்’ தோ்வாகாத ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை
ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிற ஆசிரியா்கள் ‘டெட்’ தோ்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இவா்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டில் ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமன ஆணையை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் அ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து சிறப்புரையாற்றினாா். தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், சோ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.