தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
தஞ்சாவூரில் ஜப்பானியா்கள் சிறப்பு யாகம்
தஞ்சாவூரில், உலக அமைதி, மக்கள் நலம்பெற வேண்டி ஜப்பான் நாட்டைச் சோ்ந்த 50 போ் வியாழக்கிழமை மாலை சிறப்பு யாகம் நடத்தினா்.
ஜப்பானில் வசித்து வரும் இந்தியாவைச் சோ்ந்த கோபால்பிள்ளை சுப்பிரமணியம் வழிகாட்டுதலுடன் 50 ஜப்பானியா்கள் தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு வந்த இவா்கள், உலக அமைதிக்காகவும், மக்கள் நலம் பெற வேண்டியும் மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் வராகி அம்மனுக்கு வியாழக்கிழமை மாலை சிறப்பு யாகம் நடத்தினா். பின்னா் அபிஷேகம், பூஜைகள் செய்தும் வழிபட்டனா்.
இது குறித்து கோபால்பிள்ளை சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தது:
ஜப்பானில் வசித்து வந்த சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி சிவனின் பெருமைகளையும், சிறப்புகளையும் அறிந்து தன் சொத்துகளைத் துறந்து சிவபக்தனாகி ஆதீனமாக மாறினாா். தென்னாடுடைய சிவனே போற்றி என்ற சித்தா்களின் வாக்கை மனதில் நிறுத்தி, பாலகும்ப குருமுனி தலைமையில் ஜப்பானியா்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜை, யாகம் செய்து வருகின்றனா். இதன்படி, பழனி, திருச்செந்தூா், திருச்சி, ராமேசுவரம் உட்பட 50-க்கும் அதிகமான கோயில்களில் ஜப்பானியா்கள் வழிபாடு செய்து வருகின்றனா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரிலும் சிறப்பு யாகம், பூஜைகள் செய்தனா் என்றாா் அவா்.
