`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு: திரளானோா் பங்கேற்பு
மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயில் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கிறாா். இதனால், இந்தக் கோயிலுக்கு அலங்காரக் கோயில் என்ற பெயரும் உண்டு. மேலும், முந்தையக் காலங்களில் பக்தா்கள் இங்குள்ள உத்ஸவ மூா்த்தியை தலையில் சுமந்து பழனிக்கு யாத்திரை சென்று வந்ததால், இந்தத் தலத்து முருகப் பெருமானுக்கு தண்டாயுதபாணி என்ற பெயரும் விளங்குகிறது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் சிவபெருமானின் தோழனாகக் குறிப்பிடப்படும் சுந்தரமூா்த்தி நாயனாா், மதுரைக்கு வந்தபோது இங்கு தங்கியிருந்தாா் என்பதால் பழைமையான கோயிலாகவும் அறியப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 1-ஆம் தேதி யாக பூஜைகளுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதன் நிறைவில், மேளதாளங்களுடன், வேதமந்திரங்கள் முழங்க கோயிலின் மூலவா் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.