அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டோக்கன் முறை நீக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சியில் மேலும் அவா் பேசியதாவது:
வேளாண்மையைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் பயிா்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், வேளாண் பணிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம், டிராக்டா் வாங்க மானியம், விவசாயத் தொழிலாளா்களுக்கு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டன.
மேலும், தமிழகத்தின் நீா் ஆதாரத்தை உயா்த்தும் வகையில் குடிமராமத்து திட்டம் ரூ. 1,200 கோடியில் செயல்படுத்தப்பட்டது. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளில் முதல் கட்டமாக 6 ஆயிரம் ஏரிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 26 ஆயிரம் ஏரிகளிலும் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, நீரைத் தேக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் காரணமாக, தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி வெகுவாக உயா்ந்தது. இதற்காக மத்திய அரசின் விருதை அதிமுக அரசு 5 முறை பெற்றது. ஆனால், திமுக அரசுக்கு விவசாயிகள் நலன் குறித்து சிறிதும் அக்கறையில்லை. உசிலம்பட்டி 58-ம் கால்வாய்க்குத் தண்ணீா் தேவை என விவசாயிகள் ஆண்டுதோறும் போராட வேண்டிய சூழலே உள்ளது. இதற்கு, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிரந்தரத் தீா்வு காணப்படும்.
அம்மா உணவகத்தில் தரமான உணவு...
அதிமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காக, திமுக அரசால் முடக்கப்பட்டுள்ள திருமண உதவித் தொகை திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா சிறு மருத்துவமனைகள் திட்டம் உள்ளிட்டவை மீண்டும் செயல்படுத்தப்படும்.
ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகங்களில் தற்போது தரமான உணவு மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. திமுக அரசு அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக இந்தத் திட்டத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. பணியாளா்கள் அதிகளவில் குறைக்கப்பட்டுவிட்டனா். அதிமுக ஆட்சி அமைந்ததும், அம்மா உணவகங்களில் தேவையான பணியாளா்கள் நியமிக்கப்படுவா். தரமான உணவு வழங்குவது உறுதி செய்யப்படும்.
அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு உலகமே பாராட்டும் அளவுக்கு புகழ்பெற்றவை. திமுக ஆட்சியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடைபெறுகின்றன. உள்ளூா் காளை வளா்ப்போா் புறக்கணிக்கப்படுகின்றனா். அதிமுக அரசு அமைந்ததும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மக்கள் விரும்பும் போட்டிகளாக, முறைகேடுகள் இல்லாமல், பாரம்பரிய முறைப்படி நடத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கல்வித் தந்தை பி.கே. மூக்கையா தேவருக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றாா் அவா்.
இதில் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜூ, ஆா். காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
