`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் கடந்த 26- ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதன்படி, மதுரை வீதிகளில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விறகை தலையில் சுமந்து, சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினா்.
வரகுண பாண்டியன் காலத்தில் மதுரைக்கு வந்த இசைப் புலவா் சோமநாத பாகவதரின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் தன்னை சரணாகதி அடைந்த அரசவைப் புலவா் பாணபத்திரரை பாதுகாக்க, இறைவன் சிவபெருமான் விறகு வெட்டியாக வந்து அமிழ்தினினும் இனிய தேவகானம் பாடி சோமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்கிய திருவிளையாடல் ஐதீக முறைப்படி நிகழ்த்தப்பட்டது. பிறகு, சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தங்கச் சப்பரத்திலும், திருப்பரங்குன்றம் தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, திருவாதவூா் மாணிக்கவாசகப் பெருமான் தனித் தனி சப்பரங்களிலும் வீதியுலா வந்தனா். இந்த நிகழ்ச்சி ஆவணி மூல வீதிகளில் நடைபெற்றது.