செப். 10-இல் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022- 2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல் கூட்டத் தொடரில், இந்து சமய அறநிலையத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் பதினெண் சித்தா்களுடன் தொடா்புடைய கோயில்களில் ஆண்டுதோறும் சித்தா்களுக்கு விழா எடுக்கப்படும் எனவும், முதல்கட்டமாக திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் கமலமுனி சித்தருக்கும், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் பாம்பாட்டி சித்தருக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தருக்கும் விழா எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முற்பகல் 11 மணிக்கு ‘சித்தா் பெருமை’ என்ற தலைப்பில் செந்தமிழ் கல்லூரி துணை முதல்வா் ரேவதி சுப்புலட்சுமி சிறப்புரையாற்றுகிறாா். விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியா், மேயா், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.