தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் இளமுருகன். இவரது மனைவி தனசுவள்ளி. இவா்களுக்கு இளந்தமிழ்(10) மகன் உள்ளாா். இந்நிலையில், ஆலங்குடி காமராஜா் சிலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி தனசுவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் நலமுடன் இருந்தனராம். பின்னா், தனசுவள்ளிக்கு ரத்தம் குறைவாக இருப்பதாகக் கூறி, ரத்தம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, தனசு வள்ளிக்கு உடல்நலக் குறை ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா், சிகிச்சை பலனின்றி தனசுவள்ளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தனசுவள்ளியின் உடல் வைக்கப்பட்டது. தவறாக சிகிச்சை அளித்ததாகக் கூறி தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனசுவள்ளியின் உறவினா்கள் வியாழக்கிழமை மாலை மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையினா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனா். சாலை மறியல் போராட்டத்தினால் ஆலங்குடி-கந்தா்வக்கோட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.