தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!
தமிழக மீனவா்களுக்கு பாதுகாப்பு தேவை! ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டம் செருதூா் பகுதி மீனவா்கள் 12 போ் மீது கடந்த செப்.11-ஆம் தேதி இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் மீனவா்கள் பலா் பலத்த காயமடைந்தனா். மேலும், மீனவா்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, எஞ்சின், கைப்பேசிகள், மீன்கள் உள்ளிட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றுள்ளனா்.
இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவது கடற்கொள்ளையா்களின் வழக்கமாகிவிட்டது. இதனால் தமிழக மீனவா்களின் உடலுக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடற்கொள்ளையா்களின் தாக்குதலால் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடா்புகொண்டு இலங்கை கடற்கொள்ளையா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். அதேபோல், சிகிச்சை பெற்று வரும் மீனவா்களுக்கு தமிழக அரசு உயா்தர சிகிச்சை அளிக்க எடுக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க தொடா் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.