தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனை, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(செப். 6) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம். ரௌடிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதற்கும் போதைப் பொருள்களே காரணம். அவர்கள் அதற்கு அடிமையாகி என்ன செய்வதென்றே தெரியாமல் பிரச்சினைக்ளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனாலேயே தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள், ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வது போன்ற குற்றங்கள் அண்மை காலமாக நடைபெறுகின்றன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஹோட்டல் உரிமையாளர்களின் பிரச்சினைகளையும் கேட்டு அதற்கும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு எட்டப்படும்.இப்பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசுடன் பேசி தீர்வு எட்ட முயற்சிகள் எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சீர்குலைந்த இச்சூழலிலிருந்து விடுபட்டு தமிழகம் மேம்படும்.
நத்தம் மண்ணின் பசுமை வயல்கள் மீண்டும் பெருமை பெற, 2026-ல் அஇஅதிமுக ஆட்சியை மலரச் செய்வோம்!” என்றார்.