பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஊழல் அதிகரிப்பு: அன்புணி
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 5,000 முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மகளிா் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்துக்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாக பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீத மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்கு கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த் துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டதால், வரும் தோ்தலில் அவா்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவாா்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.