தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
புது தில்லி: தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
2014 ஆம் ஆண்டு வரை 74 செயல்பாட்டு விமான நிலையங்கள் இருந்தன. இந்த நிலையில், தற்போது நாட்டில் 159 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்பாட்டில் விமான நிலையங்கள் உள்ளன.
ஓசூரில் தற்போதுள்ள விமான ஓடுதளம், தனியாா் விமான ஓடுதளமாக மொ்சஸ் தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். அந்த நிறுவனத்தில் இது இயக்கப்படுகிறது. ஒசூா் விமான நிலையம் அடுத்தடுத்த சுற்று ஏலத்திற்கான உடான் ஆவணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.