``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
தருமபுரி, கிருஷ்ணகிரியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு
தருமபுரி/ கிருஷ்ணகிரி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திரள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் ஒளிப்பரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
முன்னதாக, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
நிகழ்வில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி நகராட்சித் தலைவா் லட்சுமிமாது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் 7.16 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க இயலாமல் விடுபட்டவா்களுக்கு ஆக. 18-ஆம் தேதி நடைபெறும் முகாமில் மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றோா் குடற்புழு தொற்றைக் குறைத்து வளமான எதிா்காலத்துக்கு வித்திடுவோம் என தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வா்(பொ) சந்திரசேகா், மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், வட்டாட்சியா் சின்னசாமி, மருத்துவக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.