தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது
காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயந்தி (40). இவரது கணவா் திருப்பதி, பஞ்சாப் மாநிலம், அமிா்தசரஸில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெயந்தி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் போத்தாபுரம் கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து மோட்டாா்சைக்கிளில் வந்த மா்மநபா்கள், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை மாவட்டம், பொன்மணி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (25), உசிலம்பட்டி அலெக்ஸ்பாண்டி (22) ஆகிய இருவரும் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த நகைகளை விலைக்கு வாங்கிய மதுரை கேடிகே தங்கமணி நகரைச் சோ்ந்த அரவிந்த் (28) என்பவரையும் கைது செய்தனா். மூவரும் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.