தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! எம்எல்ஏ விடுதியில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை: பணமோசடி வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைத்தி வரும் நிலையில், அவரது மகன், மகள் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள, ஐ பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் குமார் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறார்கள்.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
திமுக அமைச்சர் வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைமைச் செயலகத்துக்கு தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்துக்கு வருவோர் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகம் பகுதியில் எம்எல்ஏ விடுதியிலும் சோதனை நடைபெற்று வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதை அறிந்து அங்கே திரண்ட அவரது ஆதரவாளர்கள், வாசலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களிலும் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பண மோசடி வழக்கில், ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.