தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பதவியேற்பு
புதுதில்லி: நாட்டின் 26-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் புதன்கிழமை (பிப்.19) பதவியேற்றுக் கொண்டார்.
தோ்தல் ஆணையா்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பாக மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் தலைமைத் தோ்தல் ஆணையராவர்.
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்துவந்த ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டத்தில், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கு அன்றைய நாள் இரவே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாா்.
அதைத் தொடா்ந்து, நாட்டின் 26-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் புதன்கிழமை (பிப்.19) பதவியேற்றுக் கொண்டார்.
2029 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியில் இருப்பார்.
தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
தலைமைத் தோ்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார், நிகழாண்டில் பிகாா் மாநில பேரவை தோ்தலையும், 2026-இல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி பேரவைகளுக்கான தோ்தல்களையும் நடத்தவுள்ளாா். 2027-ஆம் ஆண்டில் நாட்டின் குடியரசுத் தலைவா் மற்றும் குடியரசு துணைத் தலைவா் தோ்தல்களையும் இவா் மேற்பாா்வையிட உள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் முதுநிலை ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவா், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கம் செய்த மத்திய அரசின் நடவடிக்கையிலும், அயோத்தியில் ராமா் கோயில் அறக்கட்டளையை அமைப்பதிலும் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் தோ்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமாா் பின்னர் செய்தியாளர்களுடன் கூறியதாவது:
"நாட்டை கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பது. எனவே, 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக வேண்டும், எப்போதும் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருந்தது, இருந்து வருகிறது, எப்போதும் இருக்கும்" என்று கூறுகினார்.