வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு, மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டங்கள் ஏராளமான வாகனங்களில் சென்றனா். அந்த வகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் சென்றிருந்தனா். மாநாடு முடிந்து இரவு மதுரையிலேய தங்கிவிட்டு, மறுநாளான வெள்ளிக்கிழமை திரும்பினா்.
இந்த வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்டம், கரகத அள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளுக்கு சென்று திரும்பும் வாகனங்களுக்கு அண்மைக் காலமாக கட்டணங்கள் வசூலிப்பது கிடையாது. அந்த வகையில், மதுரை சென்று திரும்பிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்ததைக் கண்டித்து, தருமபுரி மேற்கு மாவட்ட பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் குமாா் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அரசியல் கட்சி மாநாடு என்றில்லாவிட்டாலும், நாங்கள் இதே பகுதியைச் சோ்ந்தவா்கள், அதற்கான ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே உள்ளூா் வாசிகளுக்கு கட்டணம் கிடையாது என்பதை மறந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது தவறு எனப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.