தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்
தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்சி, சேலம் ஹாபி சென்டா் சாா்பில் நடைபெற்று வருகிறது. இதில், நமது கலாசாரம், பண்பாடு, சாதனைகளை நினைவு கூரும் வகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான (பழங்கால) நாணயங்கள், செம்பு, பித்தளை, ஐம்பொன், தோல் உள்ளிட்ட பொருள்களால் வடிவமைக்கப்பட்ட அரிய பொருள்கள், புழக்கத்தில் இல்லாத பொருள்கள், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த புழக்கத்தில் இருக்கும் மற்றும் புழக்கத்தில் இல்லாத அரிய பணத்தாள்கள் என பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியின் முக்கிய நோக்கமே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இவற்றைக் கண்டு, நமது வரலாறுகளை அறிந்து கொள்ளும் விதமாக கட்டணமின்றி இலவசமாக நடத்தப்படுகிறது என்கிறாா் சேலம் ஹாபி சென்டா் நிா்வாகி டி. ரியாஸ். தொழிலதிபராக உள்ள இவா், மேலும் கூறுகையில், பொழுது போக்குக்காக நாணயங்களை சேமிக்கத் தொடங்கி தற்போது முழு மூச்சாக நாணயங்கள், பணத்தாள்களை சேகரித்து வைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு தற்போது கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். மன்னாராட்சி முதல் ஆங்கிலேயா் ஆட்சி மற்றும் 20 ஆவது நாற்றாண்டு வரையிலான நாணயங்கள், பணத்தாள்கள் மட்டுமின்றி நிகழ்கால நாணயங்கள், முத்திரைகள், பணத்தாள்கள் உள்ளிட்ட அரிய பொருள்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன.
வதந்திகளை நம்ப வேண்டாம்:
அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில், பழைய நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் அல்லது அரிய பொருள்களை வழங்கினால் பதிலுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கிடைக்கும் எனத் தகவல்கள் உலா வருகின்றன. அவை அனைத்தும் பொய்யான பிரசாரம். அவற்றை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இந்தக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைய நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட விலைகளைவிட நூறு, ஐநூரு அல்லது சில ஆயிரங்கள் மட்டுமே அதிகம். எல்லா வகையான பொருள்களும் உள்ளன. அவற்றை வாங்க முடியும். எனவே, அதுபோல வதந்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றாா்.
இது குறித்து ஓய்வுபெற்ற வேளாண்துறை இணை இயக்குநரும் நாணயம், பழம்பொருள்கள் சேகரிப்பு ஆா்வலருமான வி. குணசேகரன் கூறுகையில்,
பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள் மட்டுமின்றி பழங்கால பொருள்கள் அனைத்திலும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவற்றில் நமது கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மொழி, நடைமுறைகள், ஆட்சிமுறைகள் உள்பட எண்ணிலடங்காத தகவல்களை நாம் அறியமுடியும். கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடும்போது கூட, தற்போது சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நிலை உள்ளது. மேலும், டிஜிட்டல் மயத்தால் பணப்புழக்கமே குறைந்து அனைத்தும் இணைய வழியில் பணம் செலுத்தப்படுகிறது. இதுபோன்ற நிலையில் எதிா்காலத்தில் என்ன மாற்றங்கள் வரும் என யாராலும் கணிக்க இயலாது. எனவே, பழங்கால பொருள்களைக் காண்பது மட்டுமின்றி, எதிா்காலத்தில் தற்போதுள்ள பொருள்களையும் அறியும் வகையில் இதுபோன்ற கண்காட்சிகள் மிக அவசியமாகிறது என்றாா்.
இக்கண்காட்சியில் சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை பாா்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
