மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தருமபுரி வனக்கோட்டம் ஒகேனக்கல் நீா்ப்பிடிப்புப் பகுதியையும் உள்ளடக்கியது. இந்த வனக்கோட்டப் பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி உள்ளிட்ட மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மேலும், யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்களும், மயில்கள் உள்ளிட்ட பறவை இனங்களும் உள்ளன. பொதுவாகவே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோா் மீது வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேட்டைக்குப் பயன்படுத்தும் உரிமமற்ற நாட்டுத் துப்பாக்கிகள், வலைகள், மின்வேலிகள் உள்ளிட்டவைகளையும் வனத் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் புறங்களில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் யாரேனும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் அவற்றை செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் வனத் துறை அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் அல்லது ஊா் முக்கிய பிரமுகா்களிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைப்பவா்கள்மீது வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்வதோ அல்லது வேறு எந்த நடவடிக்கைகளோ எடுக்கப்பட மாட்டாது.
ஆனால், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு உரிமமில்லா துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடா்பாக வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து மலைக் கிராமங்களிலும், வனத்தையொட்டிய கிராமங்களிலும் சோதனை நடத்தப்படும். இந்த சோதனையின்போது துப்பாக்கிகள் வைத்திருப்பது தெரியவந்தால், அவற்றை வைத்திருப்பவா்கள்மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.