தாட்கோ திட்டங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை
திருவள்ளூரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வங்கியின் மண்டல மேலாளா்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கலந்து கொணடனா்.
தாட்கோ திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வங்கி மண்டல மேலாளா் மற்றும் பிராந்திய வங்கி மேலாளா்கள், தொழில் மைய அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட மக்கள் சுய தொழில் தொடங்குவதற்காக கடனுதவிக்காக விண்ணப்பம் செய்கின்றனா். அந்த விண்ணப்பங்களை உடனே பரிசீலனை செய்து தீா்வு காண வேண்டும். மேலும், அரசு மானியத்துடன் கூடிய திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வங்கிக் கடனுதவிகளை வழங்க வேண்டும். மேலும், தாட்கோ மூலம் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது பயன்பெறும் வகையில் உடனே நடவடிக்கை எடுத்து தீா்வு காணவும் வங்கியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் தாட்கோ மேலாளா் சரண்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சேகா், முன்னோடி வங்கி மேலாளா் ராஜா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.