விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா்.
வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே தாயமங்கலத்துக்கு திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் காா், வேன், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்தினா், உறவினா்களுடன் வந்து குவிந்தனா். இவா்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி எடுத்து, முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு பூஜை நடத்தியும் அம்மனை தரிசித்தனா்.
கோயில் உள்பிரகாரத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா். மேலும், மதுரை, மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல ஊா்களிலிருந்தும் தாயமங்கலத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகமாக உள்ளதால், திருவிழா நாள்களில் பக்தா்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும், பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும் கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.