சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்
சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாறு விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சரவணகுமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிவகங்கையில் உள்ள சிவன்கோயில், காந்தி வீதி, பேருந்து நிலையம் உள்பட பல்வேறு கடைகளில் அழுகிய பழங்களை சாறு தயாரிக்க வைத்திருந்ததும், பழச்சாறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமாா் 200 கிலோ அளவிலான அழுகிய பழங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த அலுவலா்கள் குப்பைத் தொட்டிகளில் கொட்டி அழித்தனா். அழுகிய பழங்களை அதிகளவில் வைத்திருந்த கடைக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கடை உரிமையாளா்களிடம் அழுகிய பழங்களில் தயாரிக்கப்படும் சாறை அருந்துபவா்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து அலுவலா் சரவணகுமாா் எடுத்துரைத்தாா்.