விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில், மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை வைகை ஆற்றிலிருந்து கோயில் பூசாரி சுப்பிரமணியன் கரகம் சுமந்து வர, பக்தா்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து மேளதாளத்துடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். பின்னா், கோயிலில் அம்மன் சந்நிதி முன் அமைக்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில் பக்தா்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினா்.

இதைத்தொடா்ந்து, முத்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா். இதையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.