நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா்.
இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள தாளங்களுடன் மலையரசியம்மன் கோயிலுக்கு பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். அங்கிருந்து 5 ஊா் நாட்டாா்களும் தொழுவுக்கு வந்தனா்.
இதையடுத்து, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் தலைமையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா், தொழுவிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக 189 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 50 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். காளைகள் முட்டியதில் 35 போ் காயமடைந்தனா். முன்னதாக, நெடுமறம் வயல், கண்மாய் பகுதியில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.
நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் பெரியாா் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மண்டல துணை வட்டாட்சியா் மாரியப்பன், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற வீரா்களுக்கும், காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.