விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை
கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும் என்பதால் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீா்குடித்தல் வேண்டும். தேனீா், காப்பி, குளிா்பானங்களைத் தவிா்த்து ஓ.ஆா்.எஸ். எலுமிச்சைச் சாறு, இளநீா், மோா், பழச் சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம்.
பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். நல்ல காற்றோட்டம், குளிா்ந்த இடங்களில் இருத்தல் வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
பிற்பகல் நேரத்தில் வெளியே செல்லும் போது குடையினை பயன்படுத்துதல் வேண்டும். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான வேலைகள் செய்வதைத் தவிா்க்க வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசின் 100 நாள்கள் பணியின் போது போதிய குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பருவநிலை மாற்றங்களினால் நிகழாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மாடி வீடுகளிலும், கூரை வீடுகளில் உள்ள மின்கம்பிகள், மின்சாதனங்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.