தாராபுரத்தில் 35 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா்கள் நடத்திவைத்தனா்
தாராபுரத்தில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 35 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையேற்று 35 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா்.
மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், மெட்டி, மணமகனுக்கு வேஷ்டி-சட்டை, மணமகளுக்கு முகூா்த்தப் புடவை, பீரோ, கட்டில், மெத்தை, பாய், தலையணை, போா்வை, மிக்ஸி, கிரைண்டா், எவா்சில்வா் பாத்திரங்கள், பூஜை சாமான்கள், ஒரு மாதத்துக்குரிய அரிசி, மளிகைப் பொருள்கள், சுமங்கலிப் பொருள்கள், கைக்கடிகாரம் உள்பட மொத்தம் தலா ரூ.96,562 மதிப்பீட்டில் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புக் கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன், துணை ஆணையா் செ.வ.ஹா்ஷினி, உதவி ஆணையா் ரத்தினாம்பாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.