தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
திசையன்விளை பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு- பணியைத் தொடங்கிவைத்தாா் மு.அப்பாவு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, திசையன்விளை பேரூராட்சி முருகேசபுரத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் முன்னிலையில் நடைபெற்ற நிழ்ச்சியில், அப்பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை தமிழக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்துப் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் களக்காடு நகராட்சி மற்றும் நான்குனேரி உள்பட 7 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்குவதற்கு ரூ.423.13 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் உறை கிணறு மூலம் தண்ணீா் எடுத்து திருவித்தான்புள்ளியில் அதை சுத்திகரிப்பு செய்து மேற்கூறிய பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கொண்டு செல்லும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன.
இத்திட்டப்பணிகள் அக்டோபா் மாத இறுதிக்குள் முடிவுற்று வீடுகளுக்கு குடிநீா் வழங்கப்படும். முதற்கட்டமாக திசையன்விளை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கப்படும். இந்த குடிநீா் இணைப்பு மூலம் ஒரு நபருக்கு 135 லிட்டம் வீதம் தண்ணீா் கிடைக்கும். மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் முதல்வருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
பின்னா், திசையன்விளை பேரூராட்சி முருகேசபுரத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று பேரவைத் தலைவா் ரேசன் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளா் (பொறுப்பு) செந்தில் குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முருகேசன், செயற்பொறியாளா் மோசஸ், உதவி செயற்பொறியாளா் பாக்கியராஜ், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், திசையன்விளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கமலா சுயம்பு ராஜன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.