ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
திண்டிவனம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.66.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.66.89 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 தளங்கள் கொண்ட சாய்தள பரப்பு, இணைப்புப் பகுதி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில், மகப்பேறு மருத்துவம், அறுவை சிகிச்சைப் பிரிவு, காத்திருப்பு பகுதி, மருந்தகம், எக்ஸ்ரே, எம்.ஆா். ஐ. ஸ்கேன், கோப்புகள் அறை, புறநோயாளிகள் பிரிவு, மீட்பு அறை, மருத்துவா் அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, காவலா் விசாரணை பிரிவு, பதிவறை, பணிநேர மருத்துவா் அறை, பணிநேர செவிலியா் அறை, கழிவறையும், தனிமைப்படுத்தப்பட்ட அறை, குழந்தைகள் தீவிர
சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கருவிகள் அறை, உயா்சாா்பு அலகு வாா்டு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன், மின்தூக்கி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டுமானப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் .
வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு : இதைத் தொடா்ந்து, திண்டிவனத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.20.கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட சலவாதி சாலையில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள்,10- ஆவது வாா்டு பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மல்லாண்குட்டை குளம் மேம்படுத்தும் பணிகள், திண்டிவனம் ஜக்காம்பேட்டை ஊராட்சியில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிக்கரை மற்றும் கலிங்கம் புனரமைப்புப் பணிகள், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வி-சாலை ஊராட்சிக்குள்பட்ட முருகன் கோயில்
பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வி-சாலை ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணிகளை பாா்வையிட்டு, பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின் போது, இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) லதா, திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் முரளி ஸ்ரீ, உதவி செயற்பொறியாளா் கற்பகம், உதவிப் பொறியாளா் ஜெயபால், திண்டிவனம் நகராட்சிஆணையா் சரவணன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருணகிரி, உதவிப் பொறியாளா் மோகன்ராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரேமலதா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.