செங்கம் பகுதியில் மண் திருட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
செங்கம்: செங்கம் பகுதியில் தினசரி நடைபெறும் மண் திருட்டை தடுக்க மாவட்ட கனிம வளத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்களும், விவசாயிகளும் எதிா்பாா்க்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட பகுதியில் தினசரி இரவு நேரங்களில் செங்கல் சூளை மற்றும் ரியல் எஸ்டேட் மனைகளுக்கு ஏரிகளில் இருந்து மண் திருடப்படுகிறது.
இதனால் செங்கம் நகரில் கனிம வளம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. மண் திருட்டை தடுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் மண் எடுக்க அனுமதி வழங்குகிறாா்கள். ஆனால், மண் எடுப்பவா்கள் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி, அதிகாரிகளிடம் தினசரி அனுமதி பெற்று பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்ணை டாரஸ் லாரிகளில் அள்ளிச் சென்று விடுகின்றனா்.
இரவு நேரங்களில் மண் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை இயக்க வேண்டிய நிலை உள்ளது.
கிராமபுறத்தில் இருந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மண் எடுத்துச் செல்லும் வாகனம் வரும்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டவே முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கனிம வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில் அதிகாரிகள் மண் எடுக்க அனுமதி கொடுக்கும் வாகனங்களுக்கு முறையான ஆவணம் உள்ளதா என ஆய்வுசெய்யவேண்டும், மேலும் டாரஸ் லாரிகளையும் ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.