கரூா் சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி
விழுப்புரம்: கரூா் சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஜி. கே.மணி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கரூரில் 41 போ் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் பாமக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையளிக்க முதல்வா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உரிய முறையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஒருபெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல்துறை குற்றவாளியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், அவா்களுக்காக முதலாவதாக குரல் கொடுப்பது பாமகதான்.
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு குறித்து செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு ஜி.கே. மணி பதிலளிக்கையில், இருவரும் என்ன பேசினாா்கள் என்பது தெரியாது. தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கலாம் என்றாா் ஜி.கே. மணி.