கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
விழுப்புரத்தில் ஆயுதப் படை காவலரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் ஆயுதப்படை காவலரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், முட்ராம்பட்டு , மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் நரசிம்மராஜ் (29). விழுப்புரம் மாவட்டக் காவல் ஆயுதப் படை4- ஆவது பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு தனது பைக்கில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறினாா். அப்போது, எதிரே பைக்கில் வந்த 3 போ் நரசிம்மராஜ் சென்ற பைக் மீது மோதுவது போல் வந்தனா்.
இது குறித்து, காவலா் நரசிம்மராஜ் அவா்களிடம் கேட்டபோது, அந்த 3 பேரும் சோ்ந்து நரசிம்மராஜை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில் பலத்த காயமடைந்த காவலா் நரசிம்மராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் நிகழ்விடம் சென்று நடத்திய விசாரணையில், விழுப்புரம் ஜி. ஆா். பி. தெருவைச் சோ்ந்த பாரத்(எ) ராஜமாணிக்கம்(19), அபிஷேக்(18), சஞ்சீவி(21) ஆகியோா் காவலா் நரசிம்மராஜை தாக்கி, கத்தியால் குத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து பரத் (எ) ராஜமாணிக்கம், அபிஷேக், சஞ்சீவி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில் பரத் (எ) ராஜமாணிக்கம் ரௌடி பட்டியலில் உள்ளாா். விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் குற்றச் சரித்திர பதிவேடு உள்ளது.