ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
திண்டுக்கல்லில் குடிநீா் வசதி கோரி பெண்கள் சாலை மறியல்
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் வழங்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திண்டுக்கல்லில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா அருகே 29-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆதிசிவன் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு, உயரமான பகுதி என்பதால் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறுவதில்லை. இதனால், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் லாரி மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக லாரி மூலமாகவும் குடிநீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அந்த பகுதியைச் சோ்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.