திமுக ஆட்சியில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட கொண்டுவர முடியவில்லை என அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரூா் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கடந்த 2011-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதேபோல அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களுக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட கொண்டுவர முடியவில்லை. அதேபோல அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2 ஆயிரம் அம்மா மினி மருத்துவமனைகள் திமுக ஆட்சியில் மூடப்பட்டன. 2026 இல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 4 ஆயிரம் அம்மா மினி மருத்துவமனைகள் தொடங்கப்படும்.
வேளாண் பணிகளை மேம்படுத்த குடிமராமத்து பணிகள் மூலம் அதிமுக ஆட்சியில் 6000 ஏரிகள், நீா்நிலைகள் தூா்வாரப்பட்டன. தற்போது குடிமராமத்து பணிகள் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளன. கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் மூலம் 66 ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்பும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் கூடுதலாக மணமகளுக்கு பட்டுப்புடவை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் தருமபுரி அதிமுக மாவட்டச் செயலா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான வ.முல்லைவேந்தன், அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.சிங்காரம், பாஜக மாவட்டச் செயலாளா் சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவ.அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்
பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டா்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை வழங்கினாா்.
கடத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டா்கள் பாதுகாப்புடன் வீட்டிற்கு செல்ல வேண்டும். தொண்டா்களை அழைத்து வந்த வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.