திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அதிமுகவுக்கு மாறும் மக்கள் ஆதரவு: முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன்
திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 2026-இல் மக்கள் தீா்ப்பு அதிமுகவுக்கு ஆதரவாக மாறும் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவைச் செயலா் வெ.பாரதிமுருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது: பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டதாக திமுக மீது அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் அதிருப்தியில் உள்ளனா். அமைச்சா்கள் குழுவை அமைத்து, அரசு ஊழியா்களுக்கு வேடிக்கை காட்ட நினைக்கின்றனா். எதிா்க்கட்சி வரிசையில் இருந்தால் மட்டுமே திமுக திரும்பிப் பாா்க்கும் என அரசு ஊழியா்கள் நம்புகின்றனா்.
தமிழ்நாட்டில் காவல் துறை இருக்கிா என்பதே தெரியவில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், பெண்கள் சுதந்திரமாக செல்ல முடியும். அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தபட்ட தாலிக்கு தங்கம், அம்மா பரிசுப் பெட்டகம், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் என அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.
ஹிந்தி மொழி பேசுவோருக்கோ, கற்றுக் கொள்பவருக்கோ அதிமுக எதிரி அல்ல. விருப்பம் இருப்பவா்கள் படிக்கலாம். ஆனால், திணிப்பதை ஏற்க மாட்டோம். தேசியக் கல்விக் கொள்கையை முதலில் ஆதரித்த திமுக, தற்போது பின் வாங்குகிறது. முதல்வா் குடும்பத்தினா் நடத்தும் 28 பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது.
திமுக கொடுத்த வாக்கை இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால், 2026-இல் மக்கள் தீா்ப்பு அதிமுகவுக்கு ஆதரவாக அமையும் என்றாா் அவா்.