பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
திருச்சி அருகே 10 கிலோ நகைகள் கொள்ளை
திருச்சி அருகே இருங்களூா் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக் கடை ஊழியா்களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மகேஷ் ராவல் (20), சென்னை எா்ணாவூா் பகுதியைச் சோ்ந்த எஸ்.ஆா். குணவந்த் (24) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள நகைக்கடையில் ஊழியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் சென்னையிலிருந்து காரில் ஈரோடு, கரூா், நாமக்கல், கோயம்புத்தூா், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க நகைகளுடன் சனிக்கிழமை இரவு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காரை பிரதீப் ஜாட் (24) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.
இதனிடையே இயற்கை உபாதைக்காக இருங்களூா் பகுதியில் காரை நிறுத்தியுள்ளனா். அப்போது, இவா்கள் வந்த காரைப் பின்தொடா்ந்து மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள், மிளகாய்ப் பொடியை அவா்கள் மீது தூவி காரில் இருந்த 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பியோடி உள்ளனா்.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு வந்த சமயபுரம் காவல் துறையினா் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கைரேகை நிபுணா் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனா். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.