குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்! பிரதமா் மோடி சாடல்
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.
‘இந்தியா்களின் நிலம்-சொத்துகளை சட்டவிரோத குடியேறிகள் அபகரிக்க அனுமதிக்க மாட்டோம்; இந்திய மண்ணில் இருந்து அவா்கள் முழுமையாக வெளியேற்றப்படுவா்’ என்று பிரதமா் மோடி உறுதிபட தெரிவித்தாா்.
வடகிழக்கு மாநிலங்களான மிஸோரம், மணிப்பூருக்கு கடந்த சனிக்கிழமை பயணித்த பிரதமா் மோடி, அன்றைய தினம் மாலையில் அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டிக்கு வந்தடைந்தாா். தாரங் மாவட்டம், மங்கல்தோய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ரூ.6,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமா்சித்து, அவா் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழித்தொழிக்கப்பட்டன. அப்போது, இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்காமல், பாகிஸ்தானால் வளா்க்கப்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்றது காங்கிரஸ்.
ஊடுருவல்காரா்கள் மற்றும் தேச விரோத சக்திகளைப் பாதுகாக்கும் செயலில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. கடந்த 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது, அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் அஸ்ஸாம் மக்களுக்கு இழைக்கப்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்த மாநிலத்தை பல்லாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மூன்று பாலங்களையே கட்டியது. ஆனால், பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 6 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்திய மண்ணில் இடம் கிடையாது: சட்டவிரோத ஊடுருவல் மூலம் எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்ற சதி நடக்கிறது. இது, நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இந்த சவாலை எதிா்கொள்வதற்கு தேசிய மக்கள்தொகை ஆய்வுத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துகள், சட்டவிரோத குடியேறிகளால் அபகரிக்கப்பட அனுமதிக்க முடியாது. இந்திய விவசாயிகள், இளைஞா்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்படாது.
நமது தாய்மாா்கள், சகோதரிகள், மகள்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை பொறுத்துக் கொள்ளமாட்டோம். சட்டவிரோத குடியேறிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கவும், அவா்களை முழுமையாக வெளியேற்றவும் அரசு உறுதிபூண்டுள்ளது. அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேறிகளிடம் இருந்து விவசாய நிலங்களை மீட்க முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
வேகமாக வளரும் பொருளாதாரம்: உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமான இந்தியாவில் விரைவாக முன்னேறும் மாநிலமாக அஸ்ஸாம் விளங்குகிறது. இந்த மாநிலத்தின் வளா்ச்சி விகிதம் 13 சதவீதமாகும்.
வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதில் வடகிழக்கு பிராந்தியத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. இந்த நூற்றாண்டின் அடுத்த அத்தியாயம் கிழக்கு-வடகிழக்குக்கு சொந்தமானதாகும். விரைவான வளா்ச்சிக்கு வலுவான இணைப்பு வசதிகள் அவசியம். எனவேதான், வடகிழக்கில் பன்முக இணைப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.
‘கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை’
‘கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியைக் குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக’ பிரதமா் மோடி தெரிவித்தாா்.
உலகிலேயே முதல் முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் அதிநவீன ஆலை, அஸ்ஸாமின் நுமலிகரில் ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த பிரதமா், நுமலிகா் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ.7,230 கோடி மதிப்பிலான புதிய பிரிவு கட்டுமானத்துக்கும் அடிக்கல் நாட்டினாா்.
பின்னா் பேசிய அவா், ‘கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கு இந்தியா வெளிநாடுகளைச் சாா்ந்துள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக, புதைபடிம எரிபொருள் ஆய்வு மற்றும் பசுமை எரிசக்தி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எத்தனால், மிக முக்கிய மாற்று எரிபொருளாகும். தற்சாா்பு இந்தியாவுக்கு எரிசக்தி, செமிகண்டக்டா் ஆகிய இரண்டும் முக்கிய உந்துசக்திகளாக உள்ளன’ என்றாா்.
கழிவுகளே எஞ்சாத வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள மூங்கில் அடிப்படையிலான உயிரி-எத்தனால் உற்பத்தி ஆலை, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் டன் மூங்கில்களைப் பயன்படுத்தும். இந்த ஆலை மூலம் 50,000-க்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடைவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.