திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு இடைத்தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல்
திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
திருச்சி மாநகராட்சி 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அமமுக மாவட்டச் செயலா் ப. செந்தில்நாதன், திருச்சி மக்களவைத் தோ்தலில் போட்டியிட தனது பதவியை கடந்தாண்டு ராஜிநாமா செய்திருந்தாா்.
இதையடுத்து இந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தோ்தலை எதிா்நோக்கியிருந்தது. இந்த வாா்டுக்கு தோ்தலை நடத்த அரசியல் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தற்செயல் மற்றும் இடைத்தோ்தல்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் காலியாகவுள்ள 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான தோ்தலையும் இந்தாண்டு நடத்தவுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக, 47ஆவது வாா்டு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சியின் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மெ.த. சாலை தவவளன் கூறுகையில், வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், வாா்டுக் குழு அலுவலகம்-2 மற்றும் வாா்டுக்குழு அலுவலகம் 4-இல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை 47ஆவது வாா்டு பொதுமக்கள் பாா்த்து தங்களது பெயா் பட்டியலில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
வெளியிடப்பட்ட பட்டியலில் ஆண்கள் 5738 போ், பெண்கள் 6133 போ், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 11,873 வாக்காளா்கள் உள்ளனா். விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறும் நடைமுறை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.